மயிலாடுதுறை அருகே பயங்கரம்: மகளின் சாவுக்கு பழிதீர்க்கும் வகையில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் - மனைவியின் கையையும் துண்டித்த கொடூரம்

மகளின் சாவுக்கு பழிதீர்க்கும் வகையில் கூலி தொழிலாளியை வெட்டிக்கொன்று விட்டு அவரது மனைவியின் கையை துண்டித்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-09-09 12:45 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் தாலுகா கப்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மதிவாணன்(வயது 55). இவரது மனைவி பூங்கோதை(47). இவர்களது மகன் கார்த்திக். இவர், அதே பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் ரவி என்பவரது மகள் இலக்கியாவை காதலித்துள்ளார். அதனை ரவி கண்டித்ததால் மனமுடைந்த இலக்கியா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக கார்த்திக் மீது ரவி மிகுந்த ஆத்திரம் அடைந்தார். தனது மகளின் சாவிற்கு கார்த்திக்தான் காரணம் என கருதி அவரை பழிதீர்க்க காத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரவி தனது மகன் ஸ்ரீராம், உறவினரான பாலையூரை சேர்ந்த சதீஷ் ஆகியோருடன் கார்த்திக்கை கொலை செய்ய முடிவு செய்து அவரை தேடி அவரது வீட்டுக்கு சென்றார். வீட்டில் கார்த்திக் இல்லை. இதனால் கொலை வெறியுடன் சென்ற ரவியின் வெறித்தனம் அடங்கவில்லை.

வீட்டில் இருந்த மதிவாணனையும், அவரது மனைவி பூங்கோதையையும் ரவி உள்பட 3 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த மதிவாணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரிவாள் வெட்டில் பூங்கோதையின் கை துண்டானது. கை துண்டானதில் பலத்த காயம் அடைந்த பூங்கோதை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதிவாணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளியை கொன்று விட்டு தலைமறைவாகி விட்ட ரவி, ஸ்ரீராம், சதீஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்