சேலத்தில் ஒரே நாளில் 6 பேர் பலி: கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது - நாமக்கல்-94, தர்மபுரி-44, கிருஷ்ணகிரி-89
சேலத்தில் நேற்று ஒரே நாளில் 164 பேருக்கு தொற்று ஏற்பட்டதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது. மேலும் 6 பேர் பலியானார்கள். இதேபோல நாமக்கல்லில் 94 பேருக்கும், தர்மபுரியில் 44 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 89 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகளவு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவிற்கு 185 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 164 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 113 பேர், கெங்கவல்லியில் 12 பேர், ஆத்தூரில் 10 பேர், தலைவாசலில் 6 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 4 பேர், நங்கவள்ளி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், கன்னங்குறிச்சி, சேலம் ஒன்றியம், சங்ககிரி, தாரமங்கலம், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், மேட்டூரில் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விழுப்புரம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்து சேலத்துக்கு வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 552 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதனிடையே சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய வாலிபர் ஒருவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பலியானார். இதே போல தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 60, 62, 67 மற்றும் 53 வயதுடையவர்கள் என 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்தம் 6 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று நாமக்கல்லில் 18 பேர், ராசிபுரத்தில் 13 பேர், திருச்செங்கோட்டில் 10 பேர், குமாரபாளையத்தில் 6 பேர், வெண்ணந்தூர் மற்றும் அவினாசிப்பட்டி பகுதிகளில் தலா 4 பேர், பள்ளிப்பட்டியில் 3 பேர், பள்ளிபாளையம், பரமத்திவேலூர், அணியாபுரம், ஜேடர்பாளையம் பகுதிகளில் தலா 2 பேர், மொளசி, கோனூர், வெடியரசம்பாளையம், காடச்சநல்லூர், பவித்திரம், பச்சுடையாம்பட்டி, ஆண்டிபாளையம், சீத்தாராம்பாளையம், வாலரைகேட், என்.புதுப்பாளையம், தாத்தையங்கார்பட்டி, வையப்பமலை, தொண்டிகரடு, எலந்தகுட்டை, குருசாமிபாளையம், பொன்குறிச்சி, காக்காவேரி, ஆர்.கவுண்டம்பாளையம், வெள்ளக்கல்பட்டி, முட்டாஞ்செட்டி, அணிமூர், ஆலாம்பாளையம், பாச்சல் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவரும், சேலம், திருச்சி, கரூர் மாவட்டங்களை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 94 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,795 ஆக உயர்ந்து உள்ளது.
இதனிடையே ராசிபுரத்தை சேர்ந்த 75 வயது முதியவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இங்கு பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 23 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பணிபுரியும் 48 வயது போலீஸ்காரருக்கு சளி,காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று உறுதியானது. இதேபோல் தர்மபுரி பாரதிபுரத்தை சேர்ந்த 26 வயது டாக்டர், பாலக்கோட்டில் கணினி மையம் நடத்தும் 42 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதேபோல் ஏரியூரை சேர்ந்த 10 வயது சிறுமி, பென்னாகரத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, பாலக்கோட்டை சேர்ந்த 42 வயது காய்கறி வியாபாரி, கம்பைநல்லூரை சேர்ந்த 20 வயது மாணவி உள்பட நேற்று தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1501 ஆக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று கிருஷ்ணகிரி பகுதியில் 13 பேருக்கும், ஊத்தங்கரை பகுதியில் 13 பேருக்கும், காவேரிப்பட்டணம் பகுதியில் 8 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
பர்கூர் பகுதியில் 6 பேருக்கும், மத்தூர் பகுதியில் 8 வயது சிறுவன் உள்பட 3 ஆண்களுக்கும், ஓசூர் பகுதியில் ஒரு ஆண், 2 பெண்களுக்கும், வேப்பனப்பள்ளி பகுதியில் 2 ஆண்களுக்கும் மற்றும் பெங்களூரு பகுதியை சேர்ந்த ஒரு ஆண் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தமாக 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் 57 வயது ஆண். சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆனது. இதையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
இதேபோல கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் 67 வயது ஆண். காய்ச்சல் சளி மற்றும் மூச்சு திணறல் காரணமாக கடந்த 5-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானாவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.