ஜெயங்கொண்டத்தில் 3 ஆண்டுகளாக செயல்படாத சிக்னல்கள்

ஜெயங்கொண்டத்தில் 3 ஆண்டுகளாக சிக்னல்கள் செயல்டாமல் உள்ளன.

Update: 2020-09-09 05:43 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 4 ரோடு, விருத்தாசலம் ரோடு, சிதம்பரம் ரோடு, கும்பகோணம் ரோடு, அண்ணா சிலை போன்ற முக்கிய சந்திப்புகளில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும், செயல்படாமல் உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பு வழியாக சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான கனரக, இலகுரக, இருசக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. இதேபோல் பல்வேறு திசைகளில் இருந்து வரும் வாகனங்களால் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் போக்குவரத்து போலீசாரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுபற்றி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரியலூரில் இருந்து வரும் கனரக வாகனங்களாலும், திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை (புறவழிச்சாலை) அமைக்கும் பணியால் இப்பகுதிக்கு வந்து செல்லும் வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கடைவீதிகளில் கடைக்காரர்கள் சாலையில் வைத்திருக்கும் விளம்பர பதாகைகளினால் இருசக்கர வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது. சில நேரங்களில் கடைக்கு வருகிற இலகுரக வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் வாகனங்கள் ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் கனரக, இலகுரக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் கடைவீதி பகுதிகளில் உள்ள பழக்கடைகள், பூக்கடை உள்ளிட்ட பல்வேறு தரை கடைகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இயங்காத சிக்னல் கம்பங்கள் சாய்ந்து வீணாகி வருகிறது. சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது விழும் அபாய நிலையில் அவை உள்ளது. எனவே உயிர்சேதம் ஏற்படும் முன்பு சிக்னல் கம்பங்களை பராமரித்து சிக்னல்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் ஜெயங்கொண்டம் பகுதிக்கு போக்குவரத்து சிக்னல் பயன்பாடு தேவைதானா? என்பதை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்