கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை பெற மருத்துவ பெட்டகம்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை பெற கொரோனா வீட்டு பராமரிப்பு பெட்டகம் வந்துள்ளது.

Update: 2020-09-09 05:15 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதியானவர்களை, அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது. அந்த வகையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு 14 நாட்களுக்கு தொகுப்பாக கொரோனா வீட்டு பராமரிப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது.

இதில் ஒரு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவி, ஒரு டிஜிட்டல் தெர்மா மீட்டர், 14 முககவசம், ஒரு கை கழுவும் சோப்பு, அதிமதுரம் மற்றும் கபசுர குடிநீர் பவுடர் பாக்கெட், 60 அமுக்ரா சூரண மாத்திரை, 14 வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரை மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரை கோவிட் கையேடு ஆகியவை இருக்கும். இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியிருப்பதாவது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். தீவிர நோய் அறிகுறி இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கூடுதலாக கொரோனா வீட்டு பராமரிப்பு பெட்டகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாக்டர்களின் பரிந்துரை இருந்தால் மட்டுமே இவ்வாறு வீடுகளில் இருந்து சிகிச்சை பெற முடியும். நோயாளிகள் முறையான அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்