கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் - விழுப்புரத்தில் இன்று நடக்கிறது

கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று விழுப்புரத்தில் நடக்கிறது.

Update: 2020-09-09 02:45 GMT
விழுப்புரம்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரத்திற்கு வருகை தருகிறார். அவர் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு, ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பதோடு, புதிய திட்டப்பணிகளையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

அதன் பிறகு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து, செய்தி-மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்படும் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

அதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.

அதன் பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகள், சிறு, குறு தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களுடன் கலந்துரையாடுகிறார். இக்கூட்டங்கள் முடிந்ததும்அவர் சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து, அவர் விழுப்புரத்தில் இருந்து கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் உள்ளது. இப்பணியில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் முதல்-அமைச்சர் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வரும் வழியெங்கும் மற்றும் விழுப்புரத்தில் ஆய்வுக்கூட்டத்தை முடித்து விட்டு சென்னைக்கு செல்லும் வழியெங்கும் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இப்பணியில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நாகராஜன் மேற்பார்வையில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எழிலரசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ராதாகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி ஜியாவுல்ஹக் மற்றும் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 15 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட சுமார் 1,000 போலீசார் ஈடுபட உள்ளனர்.

இதனிடையே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு நேற்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் மூலம் போலீசார் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினர். இதுதவிர கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் முதல்-அமைச்சர் வருகையையொட்டி செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று அனைத்துத்துறை அதிகாரிகளுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வுக்கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்