தியாகதுருகம் அருகே பயங்கரம்: இட்லி சாப்பிட மறுத்த 5 வயது பெண் குழந்தை அடித்துக் கொலை - பெரியம்மா கைது

இட்லி சாப்பிட மறுத்த 5 வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த பெரியம்மா கைது செய்யப்பட்டார். தியாகதுருகம் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.

Update: 2020-09-09 00:52 GMT
கண்டாச்சிமங்கலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்விழி கிராமத்தை சேர்ந்தவர் ரொசாரியோ(வயது 45). இவரது மனைவி ஜெயராணி. இந்த தம்பதிக்கு ரென்சிமேரி(5) என்ற குழந்தை இருந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராணி இறந்து விட்டார். இதையடுத்து ரொசாரியா வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் தாயை இழந்த குழந்தை ரென்சிமேரியை, ஜெயராணியின் தாய் பச்சையம்மாள்(70) வளர்த்து வந்தார். அதே வீட்டில் ஜெயராணியின் அக்காள் ஆரோக்கியமேரி(35) என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை.

வழக்கம்போல் நேற்று காலை பச்சையம்மாள், கூலி வேலைக்கு சென்று விட்டார். அப்போது குழந்தை ரென்சிமேரி சாப்பிடுவதற்காக ஆரோக்கியமேரி இட்லி கொடுத்தார். ஆனால் குழந்தை, அந்த இட்லி தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட சென்றது.

இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியமேரி, வீதியில் விளையாடிக்கொண்டிருந்த அந்த குழந்தையை அடித்து, தரதரவென்று வீட்டுக்கு இழுத்து வந்தார். பின்னர் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட ஆரோக்கியமேரி, அந்த குழந்தையை அடித்து உதைத்தார். மேலும் வீட்டில் இருந்த கட்டையாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் அந்த குழந்தை அலறி துடித்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை ரென்சிமேரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ஆரோக்கியமேரியை கைது செய்தனர். இட்லி சாப்பிட மறுத்த 5 வயது குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்