சுருக்குமடி வலையை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை 33 கிராம மீனவர்கள் முற்றுகை - போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சுருக்குமடி வலையை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தை 33 கிராம மீனவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பல பகுதிகளில் மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, மீன்களை பிடித்து, அதனை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சிறியவகை படகுகளை வைத்து மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மீனவர்கள், பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும், பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட சோனாங்குப்பம், புதுக்குப்பம், சாமியார்பேட்டை, புதுப்பேட்டை, பெரியக்குப்பம், சின்னூர் தெற்கு, அன்னங்கோவில் உள்ளிட்ட 33 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை மனு அளிப்பதற்காக நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மீனவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள், 5 பேர் மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கலாம் என்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசாரிடம், மீனவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊர் முக்கியஸ்தர்கள் 10 பேர் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுங்கள் என போலீசார் அறிவுறுத்தினர். இதை ஏற்றுக்கொண்ட மீனவர்கள், கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து சுருக்குமடி வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சுருக்குமடி வலைகளின் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும் எனவும் கூறி கோரிக்கை மனு கொடுத்தனர்.
அப்போது கலெக்டர், இன்னும் 2 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.