விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் - கலெக்டரிடம் பா.ஜனதா நிர்வாகிகள் மனு
பிரதமரின் விவசாயிகளுக்கான கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் பா.ஜனதா நிர்வாகிகள் மனு அளித்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகளுக்கான கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். பின்னர் பா.ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணைத்தலைவர் ராஜா சுரேந்தர் ரெட்டி தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன், மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் அண்ணாதுரை, கோபிநாத், மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மோகனசுந்தரம், ஏழுமலை, செந்தில் உள்பட பலர் மாவட்ட கலெக்டர் ராமனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் பிரதமரின் கிசான் திட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. இதனை ஆய்வு செய்து தவறான விவசாயிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் தீவிரமாக ஆய்வு செய்து உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.
மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க செய்ய வேண்டும். இந்த கிசான் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்வதோடு அவர்களது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் இந்த மோசடி வழக்கை தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள போலீசார் விசாரித்தால் உரிய தீர்வு கிடைக்காது. இதனால் இந்த மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விவசாய அணி மாநில துணைத் தலைவர் ராஜா சுரேந்தர் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், இந்த மோசடியால் உண்மையான விவசாயிகளுக்கு சேர வேண்டிய உதவித்தொகை அவர்களுக்கு சேராமல் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு உதவித்தொகை சேர வழிவகை செய்ய வேண்டும். மோசடியில் ஈடுபட்டவர்கள் யார் ?யார்? என்று கண்டுபிடித்து அவர்கள் அனைவரையும் கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும், என்றார்.