புதுவையில் பயங்கரம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் ஓட ஓட வெட்டிக்கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-09-07 21:35 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னையாபுரம், அக்காசாமி மடம் வீதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 49). காங்கிரஸ் கட்சி பிரமுகர். முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரான லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வின் தீவிர ஆதரவாளர். கதர்வாரியத்தில் நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.

நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வாழைக்குளம் மாரியம்மன் கோவில் வழியாக சென்ற போது அங்கு சாலையோரம் கையில் மரக்கட்டையுடன் நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவர் திடீரென கணேசனை தாக்கினார். இதனால் நிலைகுலைந்து போன அவர் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார்.

ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த மேலும் சிலர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கணேசனை நோக்கி ஓடி வந்தனர். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து கணேசன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதைப்பார்த்ததும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிலர் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார்.

அரசியல் விரோதம் காரணமா?

இதுபற்றி தகவல் அறிந்து போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, போலீஸ் சூப்பிரண்டு மாறன், முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. கொலையுண்ட கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முத்தியால்பேட்டை போலீசார் அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கணேசன் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்பதும், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வுக்கு தேர்தல் நேரத்தில் பணி செய்துள்ளார். இதுதொடர்பாக கணேசனுக்கும் அந்த பகுதியை சேர்ந்த வேறு சிலருக்கும் இடையே அரசியல் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்த கும்பல் எது? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீர் சாலை மறியல்

காங்கிரஸ் பிரமுகர் கணேசன் கொலை செய்யப்பட்ட சம்பவம் முத்தியால்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அறிந்த சின்னையாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அஜந்தா சந்திப்பு அருகே திடீரென நேற்று இரவு ஒன்று கூடினர். கணேசனை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்