தக்கலை அருகே விபத்து: என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலி

தக்கலை அருகே நடந்த விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது.

Update: 2020-09-06 22:51 GMT
பத்மநாபபுரம்,

தக்கலையை அடுத்த மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் சுபிஷ் (வயது 20). இவர் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த செல்லம் மகன் சேதுபதி (22). இவர் பி.காம் பட்டதாரி ஆவார். இவர்கள் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அழகியமண்டபம் சென்றனர். அங்கு உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சேதுபதி ஓட்டினார். சுபிஷ் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்தார்.

தக்கலை அருகே பிலாங்காலை பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தது. அப்போது, அங்கு ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கான எந்திரங்களுடன் வாகனம் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அதன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தக்கலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அவர்களை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, சுபிஷ், சேதுபதி ஆகிய 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்