கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய ஓடுகள் கண்டெடுப்பு - பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்குமா?
கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய ஓடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடி ஊராட்சிக்குட்பட்ட கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய 4 இடங்களில் தற்போது 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் தற்போது கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது பண்டைய தமிழர்கள் அதிக அளவில் பயன்படுத்திய தமிழ் பிராமி எழுத்துகள் அடங்கிய மண் பானை ஓடுகளை தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது 6-வது கட்ட அகழாய்வு பணியில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கீழடியில் கிடைத்த பிராமி எழுத்து குறித்து தொல்லியல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
பிராமி எழுத்து என்பது, பண்டைய கால தமிழ் எழுத்து முறையாகும். மேலும் இந்த பிராமி தமிழ் எழுத்துகள் பண்டைய தமிழர்கள் வசித்த குகைகள், அவர்கள் பயன்படுத்திய ஓடுகள், முதுமக்கள் தாழிகள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 1-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய எழுத்துக்களாக இருக்கலாம் எனவும் தெரியவருகிறது.
கீழடியில இந்த எழுத்துகளை இறுதிச்சடங்கின் போது, இறந்த நபரின் பெருமை குறித்து மண்பானை ஓட்டில் எழுதி இருக்கிறார்கள்.
இதில் கா, யா, என்ற பிராமி எழுத்துகள் அதிக அளவில் ஓடுகளில் இடம்பெற்றுள்ளன. கீழடியில் இந்த தமிழ் பிராமி எழுத்துகள் அடங்கிய ஓடுகள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டதால், பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் அப்போதே நல்ல எழுத்து முறை கொண்டிருந்தனர் எனவும் அறிய முடிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தற்போது கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 6-வது கட்ட அகழ்வாராய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யும்படி தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் அகழ்வாராய்வு பணிகளை பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதிக்கவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் இந்த பணிகள் நிறைவு பெறுவதற்கு முன்னதாக பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.