சேலத்தில் மேலும் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 3 பேர் பலி
சேலத்தில் மேலும் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 3 பேர் பலியானார்கள்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 239 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 250 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 178 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 10 பேர், ஓமலூர், அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், சங்ககிரி, பனமரத்துப்பட்டி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், காடையாம்பட்டி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், கொங்கணாபுரத்தில் 3 பேர், மேட்டூர், நங்கவள்ளி, சேலம் ஒன்றியம், வீரபாண்டி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், மேச்சேரி, மகுடஞ்சாவடி, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் கொரோனாவுக்கு 12 ஆயிரத்து 535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 276 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பலியானார். மேலும் சேலத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.