புதுவை அரசின் குளறுபடிகளால் அதிகரிக்கும் கொரோனா

கொரோனா என்றதுமே உலகையே குலை நடுங்க வைக்கிறது.

Update: 2020-09-06 01:05 GMT
புதுவையில் தொற்றின் வேகம் தற்போது உச்சகட்டத்தில் உள்ளது. கடந்த காலங்களில் பக்கத்து மாநிலங்களை ஒப்பிட்டு பெருமை பேசி வந்த புதுவை மாநிலம் தற்போது மிகமிக மோசமான நிலையை நோக்கிச் செல்கிறது.

ஏப்ரல் மாதத்தில்தான் புதுவையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அரியாங்குப்பம் சொர்ணா நகரில் முதலில் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. முழுமையான ஊரடங்கு காலத்தில் இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின் அவ்வப்போது ஆங்காங்கே ஓரிரு பாதிப்பு தெரியவந்தது.

அப்போதெல்லாம் கொரோனாவை புதுவை மாநிலத்துக்குள் நுழையவிடவில்லை என்று ஆட்சியாளர்கள் நாள்தோறும் கூறிவந்தனர். முதல்கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்ததும் தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவ தொடங்கியது. அப்போதும் புதுவை எல்லையை மூடிவிட்டோம் கொரோனா புதுவை எல்லைக்குள் நுழைய முடியாது என்று தம்பட்டம் அடித்தனர். ஆனால் அதன்பின் தொடர்ச்சியாக வந்த ஊரடங்கு தளர்வுகள் புதுவையை சின்னாபின்னமாக்கியது. தொற்று பரவலை தடுக்கும் பணியில் கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் ஆளுக்கொரு உத்தரவினை பிறப்பிக்கத் தொடங்கினார்கள். ஆனால் வேலை எதுவும் நடக்கவில்லை.

வில்லியனூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் கொரோனாவினால் இறந்துவிட அவரது உடலை முறைப்படி அடக்கம் செய்யாமல் புதைகுழியில் உருட்டிவிட்ட சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் புதுவைக்கு அவப்பெயரையும் சம்பாதித்துக் கொடுத்தது. அதுமட்டுமின்றி அதே வில்லியனூர் பகுதியில் உடல்நலக்குறைவினால் இறந்த பெண்ணின் உடலை கொரோனாவினால் இறந்த மூதாட்டியின் உடலுக்குப் பதிலாக மாற்றிக் கொடுத்து தகனம் செய்யப்பட்ட சம்பவமும் கொரோனா விஷயத்தில் அரசு எந்திரம் மெத்தனமாக இருப்பதை வெளிக்காட்டியது.

கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சர் ஏழுமலை, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன், மக்கள் நீதிமய்யம் கட்சியின் மாநில தலைவர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் என அரசியல் கட்சி தலைவர்கள் உயிரிழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து நாள் தோறும் அரசிடமிருந்து புதுப்புது அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் அவை எதுவுமே செயல்வடிவம் பெறவில்லை. ஊரடங்கு தொடர்பான தகவல்களும் முறையாக அரசு சார்பில் அறிவிக்கப்படாததால் மக்கள் மத்தியில் குழப்பங்களும், குளறுபடிகளும் தான் மிச்சமானது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் புதுவையில் ஒரு சிலரின் நலனுக்காக செவ்வாய்க்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக அரசு விமர்சனத்துக்குள்ளானது. அடுத்ததாக தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதாக 32 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பும் மக்களின் கடும் எதிர்ப்பினை சம்பாதித்தது. இதனால் எந்தவித மறு அறிவிப்பும் இன்றி ஊரடங்கை அமல்படுத்த முடியாத நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. எந்த விதத்திலும் திட்டமிடப்படாமல் முன்னுக்குப்பின் முரணான அரசின் அறிவிப்புகளால் மக்கள் வேதனையைத்தான் அனுபவித்தனர்.

அதுமட்டுமின்றி கட்டுப்பாட்டு பகுதிக்குள் வசிக்கும் மக்களுக்கு அரசு சார்பில் காய்கறி, மளிகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பொருட்கள் பலரை சென்றடையவில்லை. இதனால் கடுமையான காலகட்டத்தில் பெருமளவு மக்களின் எதிர்ப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 500 பேர் வரை தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகளை அரசு ஏற்படுத்தித்தரவில்லை. 1,700 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர் என்றால் 3 ஆயிரத்து 400 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அரசு சொல்கிறது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வருபவர்கள் தாராளமாக கட்டுப்பாடின்றி வெளியே நடமாடுவதும் தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாகும்.

இத்தகையவர்களை தனியாக வைத்திருந்தாலே நோய் குணமடையும் வாய்ப்பு இருக்கும் நிலையில் அவர்களை பள்ளி, கல்லூரிகளில் தனிமைப்படுத்தி உணவு மற்றும் மாத்திரை, மருந்துகளை கொடுத்தே குணப்படுத்தி இருக்கலாம். ஆனால் அதையும் அரசு செய்யவில்லை. இந்த பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் உரிய படுக்கை வசதிகளைக்கூட அரசால் பெறமுடியவில்லை. ஒவ்வொரு தனியார் மருத்துவ கல்லூரியிலும் 300 படுக்கைகளை பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த தனியார் மருத்துவக்கல்லூரியிலும் அரசு சார்பில் 300 நோயாளிகள் அனுப்பப்படவில்லை.

புதுவையில் 6 தனியார் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த மருத்துவக்கல்லூரிகளில் தலா 300 படுக்கைகள் என்றால் அரசுக்கு 1,800 படுக்கைகள் கிடைத்திருக்கும். ஆனால் அந்த தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 600 படுக்கைகளில் மட்டுமே அரசால் அனுப்பப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு டாக்டர்கள், நர்சுகள் வருவதில்லை. சரியான உணவு வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கொரோனா விஷயத்தில் அரசானது அறிவிப்பதோடு சரி. எதுவும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்று மக்கள் மத்தியில் பரவலான பேச்சு எழுந்துள்ளது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தில் மாநில அளவிலான பஸ் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. அப்போது பல்வேறு தரப்பினரும் புதுவைக்கு அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளது.

அப்போது கொரோனாவை இலவசமாகவே புதுவை மக்களுக்கு கொடுத்துச் செல்வார்கள். அதை தடுக்கும் வகையில் கட்டுப்படுத்துவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய இடவசதியுடன் சிகிக்சை அளிக்க அரசு இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமூக பரவலான கொரோனா: புதுவையில் சமூக பரவலாக மாறிவிட்டது என்று சமீபத்தில் கவர்னர் கிரண்பெடி தெரிவித்தார். இதன் எதிரொலியாகவே அவர் மத்திய உதவியை கேட்டு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையிலேயே மத்திய மருத்துவக்குழு மற்றும் விஞ்ஞானிகள் குழுவும் புதுவைக்கு வந்து ஆய்வு செய்தது. அந்த குழுவினர் சில பரிந்துரைகளையும் அரசுக்கு அளித்துள்ளனர். அவற்றை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா எந்தவித வித்தியாசமும் இன்றி அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது. இதற்கு முன்னாள் அமைச்சரான ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ.க்களான பாலன், டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் ஆகியோர் பலியாகி உள்ளனர். மருத்துவ பணியாளர்களும் தொற்றுக்கு தப்பவில்லை. அமைச்சர்களான கந்தசாமி, கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்களான என்.எஸ்.ஜே.ஜெயபால், சிவா, பாஸ்கர் ஆகியோரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தாக்கம் குறித்து ஜிப்மர் மருத்துவமனை சமூக ஆய்வை மேற்கொண்டது. அதில், ஜூலை கடைசி வாரத்தில் புதுவையில் 20 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய சராசரியை விட உயிரிழப்பு அதிகரிப்பு

கொரோனா கட்டுக்குள் இருந்து வருவதாக புதுவை அரசு கூறிவரும் நிலையில் கொரோனாவினால் உயிரிழந்து வருவோரின் எண்ணிக்கை நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாள்தோறும் 10-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக 20 பேர் உயிரிழந்தனர். நேற்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். புதுவை மாநிலத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 298 ஆக இருந்து வருகிறது. அதாவது கொரோனா உயிரிழப்பு சதவீதம் 1.80 ஆகும். இந்திய அளவில் 1.74 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். அதன்படி பார்த்தால் புதுச்சேரியில் தேசிய சராசரியைவிட உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

இன்னும் சோதனைகளை அதிகப்படுத்தும்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக கண்டறியப்படும். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாததால் உயிரிழப்புகளும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்