காசியில் இருந்து மதுரைக்கு 2,500 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணிக்கும் சிவலிங்கம்

மதுரையில் சோழர்கால கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கு காசியில் இருந்து 2,500 கி.மீ. தூரம் சைக்கிளில் சிவலிங்கம் கொண்டு செல்லப்படுகிறது.

Update: 2020-09-05 05:45 GMT
திண்டுக்கல், 

மதுரை குன்னத்தூர் மலையில் சோழர் கால சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமான் லிங்கவடிவில் எழுந்தருளி இருந்தார். ஆனால், இந்த கோவிலில் தற்போது சிவலிங்கம் இல்லை. எனவே, கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கு, காசியில் இருந்து சிவலிங்கம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி காசியில் இருந்து மதுரைக்கு சுமார் 2,500 கி.மீ. தூரத்தை கடந்து 3 சக்கர சைக்கிளில் சிவலிங்கம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த சிவலிங்கத்தை, மதுரை ராஜாக்கூரை சேர்ந்த பாண்டியன், கீரைத்துரையை சேர்ந்த லூர்துசாமி ஆகியோர் சைக்கிளில் திண்டுக்கல் வழியாக கொண்டு சென்றனர். அப்போது திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். ஊழியர் குடியிருப்பில் சிவலிங்கத்தை, ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர். அதையடுத்து சிவலிங்கம், திண்டுக்கல்லில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக சிலையை கொண்டு வந்த பாண்டியன், லூர்துசாமி ஆகியோர் கூறியதாவது:-

காசியில் இருந்து சிவலிங்கத்தை கொண்டு வருவதற்காக 12 பேர் சென்றோம். ஊரடங்கால் 10 பேர், ஊருக்கு திரும்பினர். எனவே, நாங்கள் கொண்டு வருகிறோம். பொதுவாக காசியில் இருந்து ரெயில், பஸ், கார்களில் சிவலிங்கத்தை கொண்டு வருவார்கள். ஆனால், நாங்கள் சிவலிங்கத்தை சைக்கிளில் கொண்டு வருவதற்கு முடிவு செய்தோம். இதற்காக 185 கிலோ எடை கொண்ட சிவலிங்கத்தை 3 சக்கர சைக்கிளிலும், எங்களுடைய உடைமைகளை சாதாரண சைக்கிளிலும் வைத்து கொண்டு புறப்பட்டோம். திண்டுக்கல்லுக்கு 62-வது நாளில் வந்துள்ளோம். இங்கிருந்து சைக்கிளில் ராமேசுவரம் செல்கிறோம். அங்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்துவிட்டு, பின்னர் மதுரை குன்னத்தூர் கோவிலில் பிரதிஷ்டை செய்ய இருக்கிறோம். இதற்காக சுமார் 2,500 கி.மீ. தூரம் சிவலிங்கத்துடன் சைக்கிளில் பயணிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்