கூடலூர் அருகே, காட்டு யானை சுட்டுக்கொலையா? தனிப்படை அமைத்து வனத்துறையினர் விசாரணை
கூடலூர் அருகே காட்டுயானை சுட்டுக்கொல்லப்பட்டதா? என்று தனிப்படை அமைத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கரளிக்கண்டி வனப்பகுதியில் கடந்த 2-ந் தேதி காட்டுயானை ஒன்று நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இதை கண்ட கிராம மக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் நேரில் வந்து பார்த்தபோது, அது சுமார் 40 வயதான ஆண் காட்டு யானை என்பது தெரியவந்தது. நீண்ட நாட்களாக தீவனம் தின்னாததால், உடல் மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டது. பின்னர் அன்றைய தினம் மாலையில் அங்குள்ள நீரோடைக்கு அருகில் அந்த காட்டுயானை மயங்கி விழுந்து இறந்தது.
இதையடுத்து கால்நடை டாக்டர்கள் சுகுமாறன், பாரத்ஜோதி ஆகியோர் வரவழைக்கப்பட்டு இறந்த காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது யானையின் வலது தொடையில் துப்பாக்கி குண்டு போல் ரப்பர் மற்றும் உலோகத்தால் ஆன பொருள் துளைத்து இருந்தது தெரியவந்தது. மேலும் சீழ் வழிந்தவாறு புண் இருந்தது. இதனால் துப்பாக்கியால் சுட்டு காட்டுயானையை மர்ம ஆசாமிகள் கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில் கூடலூர் வன அலுவலர் சுமேஷ்சோமன் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கூடலூர் வன அலுவலர் சுமேஷ்சோமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இறந்த காட்டு யானையின் வலது பின்னங்காலில் ரப்பர் மற்றும் உலோகத்தால் ஆன பொருள் 5 சென்டி மீட்டர் ஆழத்துக்கு துளைத்து உள்ளது. இதனால் யானையின் காலில் படுகாயம் ஏற்பட்டு சீழ் வழிந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டு உள்ளது. இதனால் யாராவது யானையை துப்பாக்கியால் சுட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மருத்துவ குழு பரிசோதனையில் 2 மாதங்களுக்கு முன்பு யானையின் காலில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்தபொருளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் கேரள மாநிலம் நிலம்பூரில் இருந்து கூடலூர் வனத்துக்கு காட்டுயானை வரும் வழியில் நடந்து இருக்கலாம் என தெரிகிறது. இதனால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.