கொரோனா பரவலை கட்டுப்படுத்த துணை சுகாதார நிலையங்களில் மருத்துவ பரிசோதனை மத்திய நிபுணர் குழு ஆய்வு

கிராமப்புறங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த துணை சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனை முகாமை மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2020-09-04 20:51 GMT
பாகூர்,

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தினமும் சராசரியாக 400க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் ஜிப்மர் ஆய்வில் 20 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிராமங்களில் நோய் தொற்றை கட்டுப்படுத்த துணை சுகாதார நிலையங்கள் மற்றும் தாய்சேய் நல மையங்களில் கொரோனா மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

மக்களிடம் ஆர்வம் இல்லை

அதன்படி கன்னியக்கோவிலை அடுத்த மதிகிருஷ்ணாபுரம் துணை சுகாதார நிலையத்தில் நேற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ஏற்கனவே தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தொற்று அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டது.

இதேபோல் குருவிநத்தம், டி.என்.பாளையம், நல்லவாடு, மணமேடு, கரையாம்புத்தூர் உள்பட பல்வேறு துணை சுகாதார நிலையங்கள், தாய்சேய் நல மையங்களிலும் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. எனவே பல இடங்களில் 20-க்கும் குறைவானவர்களே கலந்துகொண்டனர்.

மத்திய நிபுணர் குழு ஆய்வு

இந்த முகாம்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சென்னை தேசிய நோய் தொற்று அறிவியல் மையத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர் டாக்டர் கணேஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள், எத்தனை பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்படுகிறது, யார் யாருக்கெல்லாம் சோதனை செய்யப்படுகிறது என்ற விவரங்களை கேட்டறிந்தனர். மேலும் முகாமில் பங்கேற்ற சுகாதார ஊழியர்கள், களப்பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

மேலும் செய்திகள்