வேப்பந்தட்டை அருகே பரிதாபம்: வயலில் மின்வேலியில் சிக்கி விவசாயி பலி - காப்பாற்ற முயன்ற மனைவியும் சாவு

வேப்பந்தட்டை அருகே வயலில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் உயிரிழந்தார்.

Update: 2020-09-04 15:07 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 60). விவசாயி. இவருக்கு கிருஷ்ணாபுரம்- அன்னமங்கலம் செல்லும் சாலையில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் தற்போது மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார். இப்பயிரை காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்தியதால், அவற்றில் இருந்து மக்காச்சோள பயிர்களை பாதுகாப்பதற்காக வயலை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று பெரியசாமி வயலுக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பெரியசாமியின் கால் மின்வேலியில் பட்டதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெரியசாமியின் மனைவி மலர் (52), தனது கணவர் திடீரென கீழே விழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஓடிச்சென்று அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது மலர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியசாமி, மலர் ஆகியோரின் உடல்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்