ஜி.சி.டி. கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமானதை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்

கோவை ஜி.சி.டி. கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியதை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-04 06:00 GMT
கோவை, 

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. அங்கு பணிபுரிந்த சில வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அந்த மார்க்கெட் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்குள்ள வியாபாரிகளுக்கு தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி. (அரசு தொழில்நுட்ப கல்லூரி) கல்லூரி வளாகத்தில் தற்காலிக மார்க்கெட் அமைத்து கொடுக்கப்பட்டது.

அங்கு வியாபாரிகளும், விவசாயிகளும் 150-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் வைத்து காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு மேற்கூரைகள் அமைத்து கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவிலும் பலத்த மழை பெய்தது.

இந்த மழை காரணமாக தற்காலிக மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கி, சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் அங்கு இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அத்துடன் கடைகளுக்கு செல்லும் பாதை முழுவதும் சகதியாக இருந்ததால் பொதுமக்களால் உள்ளே சென்று காய்கறிகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே இதை கண்டித்தும், மீண்டும் அண்ணா காய்கறி மார்க்கெட்டை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கக்கோரியும் வியாபாரிகள் தடாகம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த சாய்பாபாகாலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கோவையில் பெய்து வரும் மழையில் மார்க்கெட் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் போது நனைந்துகொண்டே வியாபாரம் செய்ய வேண்டியது உள்ளது. மேற்கூரை அமைத்து தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மீண்டும் அண்ணா மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்