சைக்கிள்கள் மீது சரக்கு வேன் மோதி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி - வடமதுரை அருகே பரிதாபம்

வடமதுரை அருகே சரக்குவேன் மோதியதில் சைக்கிள்களில் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2020-09-04 06:00 GMT
வடமதுரை,

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி அருகே உள்ள சாலையூரை சேர்ந்தவர் ரவி. அவருடைய மகன் தமிழ்ச்செல்வன் (வயது 13). அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சரத்கண்ணன் (12). தமிழ்ச்செல்வன் வடமதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பும், சரத்கண்ணன் முள்ளிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நண்பர்களான இவர்கள் 2 பேரும், நேற்று மதியம் தாமரைப்பாடியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக தனித்தனியாக 2 சைக்கிள்களில் சென்றனர். பின்னர் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு இருவரும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் கல்லாத்துப்பட்டி பிரிவு அருகே சைக்கிள்களில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்குவேன் எதிர்பாராதவிதமாக இவர்கள் ஓட்டி வந்த சைக்கிள்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சரத்கண்ணன் ஓட்டி வந்த சைக்கிள், சரக்கு வேனின் அடிப்பகுதியில் சிக்கியது. இருப்பினும் சரக்கு வேன், நிற்காமல் சிறிது தூரம் சைக்கிளை இழுத்துச்சென்றது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய மாணவன் சரத்கண்ணன் தலை துண்டாகி துடி துடித்து இறந்தான். மற்றொரு மாணவன், சரக்கு வேன் மோதியதும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்துக்கு காரணமான திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் கனகராஜ் (39) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் பொருட்கள் வாங்கச்சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்