பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 11-ந் தேதி பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை - அரசியல் கட்சி தலைவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 11-ந்தேதி பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை எனவும், அரசியல் கட்சி தலைவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2020-09-04 05:45 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், பொது மக்களின் நலன் கருதி ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து 11.9.2020 அன்று பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருவதற்கு அனுமதி இல்லை. பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு (5 நபர்களுக்கு மிகாமல்) மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான முன் அனுமதியை பெற்று, அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது. வருபவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மட்டும் வர வேண்டும்.

அனுமதி பெற விரும்பும் அரசியல் கட்சி தலைவர்கள் 7-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்துவதற்காக வருபவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்கு ஏதுவாக கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

சமூக இடைவெளியை கடைபிடித்தும், அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றியும் மரியாதை செலுத்த வேண்டும். வாடகை வாகனங்கள் மற்றும் திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், சரக்கு வாகனம், வேன், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்து செல்லக்கூடாது. வரும் வழித்தடங்களில் பட்டாசு வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்தி செல்லக் கூடாது. வாகனங்களில் சாதி மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. வாகனங்களில் வரும்போது, வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக்கூடாது. அஞ்சலி செலுத்த அனுமதி பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும். பொதுஇடங்களில் உருவ படங்களை வைத்து அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை.

ஒலிபெருக்கி வைத்தல், பட்டாசு வெடித்தல், சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல் போன்றவற்றிற்கு அனுமதி இல்லை.

ஜோதி, முளைப்பாரி மற்றும் பால்குடம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், தலைவர்களின் வேடமணிந்து வருதல், ஊர்வலமாக வருதல் ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை.

இவ்வாறு கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்