பள்ளிபாளையம் அருகே, மோட்டார்சைக்கிள் மோதி பெயிண்டர் பலி - தப்பி ஓடியவருக்கு போலீசார் வலைவீச்சு

பள்ளிபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் மோதி பெயிண்டர் பலியானார். தப்பி ஓடிய மோட்டார்சைக்கிளில் வந்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-09-03 22:00 GMT
பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் அருகே உள்ள 5 பனை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் மாலை 5 பனை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கண் இமைக்கும் நேரத்தில் கார்த்திகேயன் மீது பயங்கரமாக மோதியது.

பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த கார்த்திகேயனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மோட்டார் சைக்கிளில் வந்தவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பலியான கார்த்திகேயனுக்கு சத்யா (28) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் பெயிண்டர் பலியான சம்பவம் 5 பனை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்