கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் மகளிர் கல்லூரியில் சித்த மருத்துவ மையம் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் தனியார் மகளிர் கல்லூரியில் சித்த மருத்துவ மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.

Update: 2020-09-02 22:30 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோய் தொற்று ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவதற்கு கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதற்கு அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளில் இடங்களை மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நேற்று அவர் கடலூர் பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள 4 கட்டிடங்களில் கொரோனா நோயாளிகள் 150 பேர் தங்கி சிகிச்சை பெறுவதற்காக படுக்கைகள் போடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இதை பார்வையிட்ட கலெக்டர், அங்கு போதுமான குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளதா? சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கடலூர் சில்வர் பீச் சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் 100 பேர் தங்க உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு கழிவறை வசதிகள் போதுமானதாக இல்லை என்று அங்குள்ளவர்கள் குற்றம் சாட்டினர். இதை கேட்ட கலெக்டர், அதை சீரமைத்து கொடுக்க அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதையடுத்து நகராட்சி கலையரங்கத்தில் படுக்கை வசதிகள் போடப்பட்டு நோயாளிகளை தங்க வைக்கலாமா? என்றும் ஆய்வு செய்தார். அதன்பிறகு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து தனிமைப்படுத்துவதற்காக தனியாக சித்த மருத்துவ மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முதல்- அமைச்சர் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெற்று வருகிறது. புதிதாக நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு பகுதியிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தி வருகிறோம். கடந்த மாதம் வரை 2,060 படுக்கைகள் ஏற்பாடு செய்து வைத்தோம். இந்த மாதம் 6 ஆயிரம் படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்போது 2,515 படுக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக தான் இந்த ஆய்வு நடக்கிறது. படுக்கை வசதிகள், கழிவறை வசதிகள் போன்ற சுகாதார வசதிகள் அளிப்பதற்காக அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

கடலூர் தனியார் மகளிர் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கிறோம். அதாவது சித்த மருத்துவம் மூலம் நோயாளிகளை குணப்படுத்துவதற்காக கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக முழுக்க, முழுக்க சித்த மருத்துவ மையமாக அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். சிகிச்சை, மருந்து, மாத்திரைகள், உணவு என முழுவதும் சித்த மருத்துவ முறைப்படி வழங்கப்படும். இதில் 100 படுக்கைகள் அமைக்கப்படுகிறது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது என்று பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் உமிழ்நீர் பரிசோதனை 300, 400 பேரிடம் தான் எடுத்தோம். ஆனால் தற்போது 3 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்கிறோம். 24 மணி நேரத்தில் முடிவுகளையும் அறிவித்து வருகிறோம். இதனால் தான் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நோயாளிகளை சீக்கிரம் அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துகிறோம்.

அரசு அறிவித்தபடி, முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். இதை கடைபிடித்தால் நோய் தொற்றில் இருந்து முழுமையாக விடுபடலாம். நாள் ஒன்றுக்கு 400 சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்துகிறோம். இதை மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த அறிகுறி இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கடலூர் கோண்டூர், ஆயங்குடி, சி.கொத்தங்குடி, நல்லூர், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் அதிக பாதிப்பு உள்ளது. இருப்பினும் அவர்களை கண்டறிந்து, அவர்களின் உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்கிறோம். பாதிப்பு இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்தி விடுகிறோம். பொது மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். திருமண நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டத்தில் 74 வெண்டிலேட்டர் உள்ளது. கூடுதலாக 10 வெண்டிலேட்டர் இருப்பு வைத்துள்ளோம். தேவைப்பட்டால் அதை பயன்படுத்துவோம். மற்ற மாவட்டங்களை விட நமது மாவட்டத்தில் இறப்பு விகிதம் குறைவு தான்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் கொரோனா நோயாளிகள் 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 17 பேர் குறைவான பாதிப்பிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 39 நடமாடும் குழுவினரும் பரிசோதனை செய்து வருகின்றனர்.

ஆய்வின் போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதா, கடலூர் கோட்டாட்சியர் வெற்றிவேல் (பொறுப்பு), நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, கடலூர் தாசில்தார் செல்வக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்