நெல்லை, தூத்துக்குடியில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி தென்காசியில் 82 பேருக்கு தொற்று

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். தென்காசியில் 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-09-03 01:10 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் 3 பேர் உள்பட 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் பாப்பாக்குடி, நாங்குநேரி, சேரன்மாதேவி, களக்காடு, மானூர், ராதாபுரம், வள்ளியூர், அம்பை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியானார்கள்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 796-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1,232 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 178 பேர் இறந்து உள்ளனர்.

தென்காசி-தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 547 ஆகும். இதில் 4701 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 742 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 104 பேர் இறந்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று, சமீபகாலமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 532-ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 577 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 841 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தூத்துக்குடியை சேர்ந்த 46 வயது பெண் ஒருவர் நேற்று கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 114-ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் செய்திகள்