நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு இறந்த சம்பவம்: 3 தொழிலாளர்கள் கைது
நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 தொழிலாளர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே செங்கல்படுகை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாபர் அலி. விவசாயி. தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 13-ந் தேதி வழக்கம்போல் பசுமாடுகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. மாலையில் அவை திரும்பி வந்தன. ஆனால் ஒரு பசுமாடு மட்டும் வரவில்லை. உடனே அதை தேடி முகமது ஜாபர் அலி சென்றார். அப்போது கல்லாறு ஆற்றில் அருகே வாய் கிழிந்த நிலையில் அந்த பசுமாடு நின்றிருந்தது. உணவு தின்னவும், தண்ணீர் குடிக்கவும் முடியாமல் அவதிப்பட்டது. தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் பசுமாடு உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காட்டுப்பன்றியை கொல்ல சட்டவிரோதமாக வைக்கப்படும் நாட்டு வெடிகுண்டை பசுமாடு கடித்ததும், அதனால் வாய் கிழிந்து உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது.
உடனே சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நாட்டு வெடிகுண்டு வைத்தவர்களை பிடிக்க வனச்சரகர் செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கெண்டையூரை சேர்ந்த ஸ்ரீகாந்த்(வயது 22), டேங்க்மேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ்(30), கண்டியூரை சேர்ந்த கிருஷ்ணன்(64) ஆகியோர் காட்டுப்பன்றியை கொல்ல நாட்டு வெடிகுண்டு வைத்ததும், அதனை தாசம்பாளையத்தை சேர்ந்த குணசேகரன்(22) தயாரித்து கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீகாந்த், குணசேகரன், கிருஷ்ணன் ஆகிய தொழிலாளர்கள் 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவாகிய பிரகாஷை வலைவீசி தேடி வருகின்றனர்.