காரைக்குடி அருகே இரவில் பயங்கரம்: சித்தப்பாவை கொடூரமாக கொன்ற மகன்கள் - தலையை துண்டித்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர்
காரைக்குடி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை தலையை துண்டித்து கொலை செய்த மகன்கள், அந்த தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் யூசுப் ரகுமான் (வயது 45). இவர் அந்த பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். இவருக்கும், இவரது அண்ணன் சகுபர் அலிக்கும் இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்தது.
இது தொடர்பாக அவர்களுக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சகுபர் அலியின் மகன்கள் ரியாஸ் கான் (36), ரகுமான் கான் (31) ஆகியோர் சொத்து பிரச்சினை தொடர்பாக தனது சித்தப்பா யூசுப் ரகுமானை நேற்று இரவில் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்களுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ரியாஸ் கான் மற்றும் அவரது தம்பி ரகுமான்கான் ஆகிய 2 பேரும் சேர்ந்து தனது சித்தப்பா என்று கூட பாராமல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வெட்டி யூசுப் ரகுமானின் தலையை துண்டித்தனர்.
பின்னர் துண்டித்த தலையுடன் சாக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தனர். துண்டிக்கப்பட்ட தலையுடன் 2 பேர் வந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்டவர் உடலையும், தலையையும் போலீசார் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 மகன்களே சித்தப்பாவின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.