கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-08-28 01:18 GMT
புதுச்சேரி,

கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்கவேண்டும், ஆட்டோ தொழிலாளர் நலவாரியம் அமைக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் புதுவை ரோடியர் மில் திடலில் நேற்று காலை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தொழிலாளர்கள் ரோடியர் மில் திடலுக்கு வந்தனர். அங்கு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த காத்திருப்பு போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். போராட்டத்தை தலைவர் முருகன் தொடங்கிவைத்தார். சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் பிரபுராஜ், ராஜ்குமார், கொளஞ்சியப்பன், மதிவாணன், ஆட்டோ சங்க செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் விஜயகுமார், சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் வடிவேல், பொருளாளர் வீரமணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பிற்பகலில் அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் கடலூர் சாலை, மறைமலையடிகள் சாலை, அண்ணசாலை, நேரு வீதி வழியாக மிஷன் வீதியை அடைந்தது. அதற்கு மேல் செல்ல அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் வாகனங்களை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேருவீதி-மிஷன் வீதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் முதல்-அமைச்சரை சந்திக்கும் விதமாக போலீசார் அழைத்து சென்றனர். அவர்கள் சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினார்கள்.

அப்போது நலவாரியம், போக்குவரத்து வாகனங்களுக்கான வரி உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்பாக வருகிற 31-ந்தேதி அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரும் என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து சி.ஐ.டி.யு. நிர்வாகிகள், தொழிலாளர்களிடம் முதல்-அமைச்சரின் உறுதி தொடர்பாக எடுத்துக்கூறினார்கள். மேலும் போக்குவரத்து அதிகாரிகளும் அங்கு வந்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக உறுதி அளித்தனர். அதன்பின் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக கூறிவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்