மும்பையில் ஒரே நாளில் 3 இடங்களில் துயரம்: கட்டிடம் இடிந்து பாட்டி, பேத்தி பலி 3 பெண்கள் காயம்

மும்பையில் ஒரேநாளில் 3 இடங்களில் நடந்த கட்டிட விபத்தில் பாட்டி, பேத்தி பலியானார்கள். மேலும் 3 பெண்கள் காயமடைந்தனர்.

Update: 2020-08-28 00:47 GMT
மும்பை,

மும்பை, நாக்பாடா சுக்லாஜி தெரு, ஆயிஷா காம்பவுண்டில் பழமையான 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் கழிவறை பகுதி நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து மீட்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கட்டிட இடிபாடுகளில் 4 பேர் சிக்கியிருக்கலாம் என கருதப்பட்டது.

மீட்பு பணியின்போது 70 வயது மூதாட்டி நூர் குரேஷி என்பவரும், 12 வயது ஆலியா குரேஷியும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பலியான அவர்கள் பாட்டி, பேத்தி என்பது தெரியவந்தது.மேலும் சுமித்திரா என்ற 35 வயது பெண் லேசான காயத்துடன் மீட்கப்பட்டார்.

மாநில வீட்டு வசதித்துறை மந்திரி ஜிதேந்திர அவாத், மேயர் கிஷோரி பெட்னேகர் ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

முன்னதாக நேற்று காலை 11.45 மணியளவில் செம்பூர், மகாத்மா புலே நகரில்வீட்டின் பால்கனி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் துல்சாபாய் என்ற 54 வயது பெண் ஒருவர் படுகாயமடைந்தார். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜவாடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதவிர தேவ்னார், கவுதம் நகரில் நேற்று மதியம் 3 மணியளவில் வீட்டின் ஒரு பகுதி இடிந்தது. இந்த விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

கடந்த திங்கட்கிழமை ராய்காட் மாவட்டம் மகாட் பகுதியில் 5 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் 16 பேர் பலியானார்கள். இந்தநிலையில் மும்பையில் ஒரே நாளில் 3 இடங்களில் கட்டிட விபத்து ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

மேலும் செய்திகள்