புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி

புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-08-27 23:15 GMT
புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே இருந்தது. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது முதல் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதிலும் கடந்த ஜூலை மாதம் முதல் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 பேர் பாதிப்பு என்ற எண்ணிக்கையில் இருந்த தொற்று தற்போது நாள் ஒன்றுக்கு 300 முதல் 500 பேர் வரை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக ஒவ்வொரு நாளும் 4 முதல் 8 பேர் வரை இறந்தனர். புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 10 பேர் இறந்துள்ளனர். இதற்கிடையே தொற்று தொடர்பாக மத்தியக்குழுவும், ஜிப்மர் குழுவும் புதுவையில் ஆய்வு நடத்தி உள்ளது.

தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கண்டறிய பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு நாளும் 1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,486 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 511 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 10 பேர் பலியாகி உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இதுவரை 68 ஆயிரத்து 888 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 55 ஆயிரத்து 120 பேருக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 ஆயிரத்து 434 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4ஆயிரத்து 483 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 2 ஆயிரத்து 127 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 356 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

7 ஆயிரத்து 761 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சாவு எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் 62.42 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.53 சதவீதமாகவும் உள்ளது.

மேலும் செய்திகள்