மயிலாடுதுறை அருகே, திருமணமான 11 மாதங்களில் ஓட்டல் தொழிலாளி சாவு - மனைவி மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

மயிலாடுதுறை அருகே திருமணமான 11 மாதங்களில் ஓட்டல் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் மனைவி மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-08-27 23:00 GMT
குத்தாலம், 

மயிலாடுதுறை அருகே உள்ள ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவருடைய மகன் ரவீந்திரன்(வயது 27). ஓட்டல் தொழிலாளியான இவருக்கும், திருவிழந்தூரை சேர்ந்த ராஜா மகள் பிரியா(25) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த.து. திருமணத்துக்கு பின்னர் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அருகே இருந்த உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து ரவீந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். உடனே அக்கம் பக்கத்தினர் ரவீந்திரனை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரவீந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ரவீந்திரனின் சகோதரர் சரவணன்(23) புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ரவீந்திரன் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்தனர். மேலும் ரவீந்திரன் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரது மனைவியை கைது செய்யக்கோரி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதைத்தொடர்ந்து ரவீந்திரன் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச்சென்றனர். இதனால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்