காரைக்கால் அருகே தாயின் 2-வது கணவரை அடித்துக்கொன்ற தொழிலாளி 25 ஆண்டுகளுக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர்

காரைக்கால் அருகே தாயின் 2-வது கணவரை அடித்துக்கொன்ற தொழிலாளி 25 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பிடியில் சிக்கினார்.

Update: 2020-08-27 00:29 GMT
காரைக்கால்,

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சுப்புராயபுரத்தை சேர்ந்தவர் சம்னுஸ்மேரி (வயது 48). இவருடைய கணவர் சாமிக்கண்ணு. இவர் களின் மகன் அடைக்கலதாஸ் (29). தொழிலாளி சாமிக் கண்ணு இறந்து விட்டதால் சம்னுஸ்மேரி, ராஜமாணிக்கம் (50) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ராஜமாணிக்கத்துக்கும், அடைக்கலதாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அடைக்கலதாஸ் தனது தாயின் 2-வது கணவர் ராஜமாணிக்கத்தை கட்டையால் அடித்துக்கொலை செய்தார். இந்த சம்பவம் 1990-ம் ஆண்டு நடந்தது. பின்னர் ராஜமாணிக்கம் உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல அடைக்கலதாஸ் நாடகமாடினார்.

இது குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜமாணிக்கத்தை அடைக்கலதாஸ் அடித்துக்கொலை செய்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அடைக்கலதாசையும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சம்னுஸ்மேரியையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு காரைக்கால் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 1994-ம் ஆண்டு இந்த கொலை வழக்கில் இருந்து சம்னுஸ்மேரி விடுதலை செய்யப்பட்டார். அடைக்கலதாஸ் மீதான வழக்கு மட்டும் நடந்து வந்தது.

இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அடைக்கலதாஸ் தலைமறைவானார். இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக காரைக்கால் மாவட்ட கோர்ட்டு கடந்த 1995-ம் ஆண்டு அறிவித்தது. பல இடங்களில் அவரை போலீசார் தேடியும் அடைக்கலதாஸ் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்ற நிகரிகா பட், தேடப்படும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் தலைமையிலான தனிப்படையினர் அடைக்கலதாசை தீவிரமாக தேடினர். அப்போது அவர் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடம்பங்குடி பகுதியில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கடம்பங்குடிக்கு நேற்று முன்தினம் ரகசியமாக வந்த திருநள்ளாறு போலீசார், அடைக்கலதாசை கைது செய்தனர். பின்னர் அவரை காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட அடைக்கலதாசுக்கு தற்போது 59 வயது ஆகிறது. தாயின் 2-வது கணவரை அடித்துக்கொன்ற வாலிபர் 25 ஆண்டுகளுக்கு பின் 59 வயது முதியவராக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் காரைக்கால் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்