ஏ.டி.எம். எந்திரத்தை வெட்டி ரூ.27 லட்சம் கொள்ளை: அரியானா, கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது சிறையில் திட்டம் தீட்டியது அம்பலம்

பெங்களூருவில் ஏ.டி.எம். எந்திரத்தை வெட்டி எடுத்து ரூ.27 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அரியானா, கேரளாவை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் கொள்ளையடிக்க சிறையில் வைத்தே திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது.

Update: 2020-08-26 22:32 GMT
பெங்களூரு,

பெங்களூரு ஜாலஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் இரவு நேர காவலாளிகள் இல்லை. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்மநபர்கள் கியாஸ் கட்டரை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை வெட்டி எடுத்து அதில் இருந்த ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்தனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சுவிங்கத்தையும் ஒட்டி சென்று இருந்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் ஜாலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஜாலஹள்ளி போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடித்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சமர்ஜோத் சிங், ஜாபர் சாதிக், யகா ஆகியோர் என்பதும், இவர்கள் தான் ஏ.டி.எம். எந்திரத்தை வெட்டி எடுத்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதனால் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் சமர்ஜோத் சிங் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். ஜாபர் சாதிக்கும், யகாவும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். கடந்த ஜனவரி மாதம் பேடராயனபுரா பகுதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் திருட முயன்றதாக சமர்ஜோத் சிங்கை போலீசார் கைது செய்து பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்து இருந்தனர்.

இதுபோல சதாசிவநகர் போலீசார் ஒரு வழக்கில் ஜாபர் சாதிக், யகா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். சிறையில் வைத்து 3 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது வெளியே சென்றதும் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க 3 பேரும் திட்டம் தீட்டியுள்ளனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த 3 பேரும் ஏ.டி.எம். மையத்தில் கைவரிசை காட்டியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

மேலும் செய்திகள்