14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் 2 மணி நேரம் வேலைநிறுத்தம்
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் 2 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கேரளாவில் மதுபான கடைகளுக்கான நடைமுறைகளை தமிழகத்தில் கடைபிடிக்க வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக அனைத்து டாஸ் மாக் ஊழியர்கள் சங்கங்களும் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் 2 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்தது. அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம்
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 156 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுக்கடைகளுக்கு அருகே ஊழியர்கள் நின்றனர். ஆனால், டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளை சரியான நேரத்தில் திறக்கும்படி ஊழியர்களிடம் வலியுறுத்தினர்.
எனவே, அதிகாரிகளின் உத்தரவுபடி கடைகளை திறப்பதும், சங்க நிர்வாகிகளை வந்தால் கடைகளை அடைப்பதுமாக இருந்தது. இதனால் மதுபானம் வாங்க சென்ற மதுப்பிரியர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். மேலும் 2 மணி நேரம் வேலைநிறுத்தம் செய்ததால் நேற்றைய தினம் மதுபான விற்பனை பாதிக்கப்பட்டது.