கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-08-25 23:30 GMT
கரூர்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலக சங்கத்தின் கரூர் மாவட்டம் சார்பில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்க வேண்டும். கணினி உதவியாளர்கள் மற்றும் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் பதவி உயர்வு ஆகியவற்றை கைவிட வேண்டும். சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் மாலை 6 மணிக்கு மேல் நடத்தப்படும் ஆய்வுகளை கைவிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படாமல் உள்ள மாநில நிதிக்குழு மானியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

உள்ளிருப்பு போராட்டம்

பழிவாங்கும் போக்கோடு பிறப்பிக்கப்பட்ட ஊழியர்களின் மாவட்ட மாறுதல்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலகம், குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் க.பரமத்தி, அரவக்குறிச்சி, தோகைமலை உள்பட 8 இடங்களில் இந்த உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில், அந்தந்த அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்