அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து: 2-வது நாளாக நீடித்த மீட்பு பணி பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு - 19 மணி நேரம் தவித்த சிறுவன் மீட்பு

ராய்காட் மாவட்டம் மகாடில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது. 2-வது நாளாக நடந்த மீட்புப்பணியின் போது இடிபாடுகளில் சிக்கி 19 மணி நேரமாக தவித்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

Update: 2020-08-25 23:30 GMT
மும்பை,

மும்பை அருகே உள்ள ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புரா பகுதியில் ‘தாரிக் கார்டன்’ என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது.

இந்த கட்டிடம் நேற்று முன்தினம் மாலை 6.50 மணிக்கு எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. 40 வீடுகளை கொண்ட இந்த கட்டிடத்தில் சுமார் 200 பேர் வரை வசித்து வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இடிபாடுகளுக்குள் உயிரோடு புதைந்தவர்கள் எண்ணிக்கையில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் கட்டிட இடிபாடுகளில் 59 பேர் சிக்கியதாக நேற்று முன்தினம் நள்ளிரவில் மாநில அரசின் தலைமை செயலக கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கூறியிருந்தனர். பின்னர் நடந்த விசாரணையில் சுமார் 30 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தெரியவந்தது.

இந்தநிலையில் உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் மும்பை, புனேயில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட தொடங்கினர். அவர்கள் மோப்பநாய்கள், இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை கண்டறியும் கேமரா, ஜே.சி.பி. எந்திரங்கள், கிரேன், பிளைட் லைட் மற்றும் நவீன கருவிகளுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக நேற்றும் மீட்பு பணி தொடர்ந்தது. அப்போது முகமது நதீம் பங்கி என்ற 4 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். அவன் லேசான காயம் அடைந்து இருந்தான். சுமார் 19 நேர தவிப்பிற்கு பிறகு மீட்கப்பட்ட சிறுவனை மீட்பு குழுவினர் தூக்கி வந்தபோது, அங்கு கூடியிருந்தவர்கள் ஆரவாரம் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆனால் சிறிது நேரத்தில் சிறுவனின் தாய் நவுசிக் நதீம் பங்கி (வயது 30) இடிபாடுகளில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். மேலும் சிறுவனின் அக்காள் ஆயிஷா (7), தங்கை ருக்காயி (2) ஆகியோரும் பிணமாக மீட்கப்பட்டனர். இது மீட்பு குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியது.

நேற்று வரை இடிபாடுகளில் இருந்து 13 பேர் பிணமாக மீட்கப்பட்டதாக பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர். மேலும் கட்டிடம் இடிந்து விழுந்தபோது, அந்த வழியாக சென்ற ஒருவர் மீது கல் விழுந்தது. இதில் அவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே குடியிருப்புவாசிகள் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தகவல் தெரியவந்து உள்ளது. கட்டிடத்தின் தூண்கள் நொறுங்குவதை பார்த்து பலர் சுதாரித்து கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பி உள்ளனர். இதேபோல கட்டிடத்தின் மேல் மாடிகள் மட்டுமே முதலில் இடிந்து உள்ளன. இதை அறிந்து கீழ் தளத்தில் உள்ளவர்கள் பலர் வெளியேறி விட்டனர்.

மேலும் கொரோனாவால் சொந்த ஊருக்கு சென்றவர்கள், வேலைக்கு சென்றவர்கள் என பலர் தப்பியது தெரியவந்தது.

இந்தநிலையில் சம்பவம் குறித்து கட்டிடத்தின் கட்டுமான அதிபர், ஒப்பந்ததாரர், என்ஜினீயர், வடிவமைப்பாளர் உள்பட 5 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல கட்டிட விபத்துக்கு காரணமான ஒருவா் கூட தப்பிக்க முடியாது என சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மந்திரி ஏக்னாத் ஷிண்டே எச்சரித்து உள்ளார்.

குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி உள்ள துயர சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கவலை தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்