கீழப்பழுவூர் அருகே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற முதியவரின் கை செயலிழந்தது
கீழப்பழுவூர் அருகே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற முதியவரின் கை செயலிழந்ததால், அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 65). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு பரிசோதனைக்கு ரத்த மாதிரி எடுப்பதற்காக அவருக்கு பலமுறை ஊசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய வலது கை முழுவதும் செயலிழந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் கொரோனாவுக்கான சிகிச்சையில் அவர் குணமடைந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் அவரை வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். இதற்கிடையே அவர், தனது கை செயல்படாமல் உள்ளது என்று அங்குள்ள டாக்டர்களிடம் தெரிவித்தபோது, தானாக சரியாகிவிடும், வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறி, அவரை அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
ஆனால் வீட்டிற்கு வந்த பின்னரும் அவருடைய கை செயலற்ற நிலையில் இருந்ததால், அவரை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால் அங்கு மேல்சிகிச்சை அளிக்க மறுத்ததன் காரணமாக, அவரை மீண்டும் ஊருக்கு அழைத்து வந்தனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, தவறான சிகிச்சை அளித்து கை செயலிழக்க காரணமான டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று காலை குந்தபுரம் கிராமத்தில், திருமழபாடியில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு...
இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் சந்திரசேகரன், திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாமிநாதனின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாமிநாதனை மேல் சிகிச்சைக்கு நாங்கள் அழைத்து செல்கிறோம் என்று அதிகாரிகள் உறுதியளித்து, அதன்படி சாமிநாதனை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.