உக்கேரியில் சிவாஜி சிலையை நிறுவ வலியுறுத்தி: கர்நாடகத்திற்குள் நுழைய முயன்ற சிவசேனா தொண்டர்கள் தடுத்து நிறுத்தம், போலீசாருடன் வாக்குவாதம்-பரபரப்பு

உக்கேரியில் சிவாஜி சிலையை நிறுவ வலியுறுத்தி கர்நாடகத்திற்குள் நுழைய முயன்ற சிவசேனா கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது சிவசேனா கட்சியினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.

Update: 2020-08-25 22:15 GMT
பெலகாவி,

கர்நாடக-மராட்டிய எல்லையில் அமைந்து உள்ள பெலகாவி மாவட்டத்தில் ஏராளமான மராட்டியர்கள் வசித்து வருகின்றனர். மேலும் பெலகாவியை மராட்டியத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்று மராட்டிய அரசு கூறி வருகிறது. ஆனால் பெலகாவி கர்நாடகத்துக்கு சொந்தமானது என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. இதனால் நீண்ட காலமாக கர்நாடகம், மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை நிலவி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெலகாவி மாவட்டம் உக்கேரி அருகே ஒரு கிராமத்தில் வைக்கப்பட்டு இருந்த மராட்டிய மன்னர் சிவாஜியின் சிலை அகற்றப்பட்டது. உக்கேரி தொகுதி எம்.எல்.ஏ. உத்தரவின்பேரில் தான் சிலை அகற்றப்பட்டது என்று கூறி உக்கேரியில் வசித்து வரும் மராட்டியர்கள் போராட்டம் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலை அகற்றப்பட்டது தொடர்பாக எடியூரப்பாவுக்கு, மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடிதமும் எழுதி இருந்தார். மேலும் கானாப்புரா தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வான அஞ்சலி நிம்பால்கரும் சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அகற்றப்பட்ட சிவாஜி சிலையை அதே இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறி இருந்தனர்.

ஆனால் சிவாஜி சிலையை மீண்டும் நிறுவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் சிவாஜி சிலையை மீண்டும் நிறுவ வலியுறுத்தி கோலாப்பூர் மாவட்ட சிவசேனா கட்சியின் தலைவர் விஜய்தேவன் தலைமையில் நேற்று 500-க்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் மராட்டியத்தில் உள்ள கவரட்டிஹட்டி பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு உக்கேரி நகருக்குள் நுழைய முயன்றனர்.

இதுபற்றி அறிந்த உக்கேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் குருராஜ் கல்யாண் ஷெட்டி தலைமையிலான போலீசார், சிவசேனா தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன், சிவசேனா தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிவசேனா தொண்டர்களுடன், இன்ஸ்பெக்டர் குருராஜ் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார். மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காத வகையில் தடுக்க உக்கேரி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்