15-வது நிதிக்குழு மானிய நிதியை பஞ்சாயத்து தலைவர்களே கையாளும் உரிமையை வழங்க வேண்டும்

15-வது நிதிக்குழு மானிய நிதியை பஞ்சாயத்து தலைவர்களே கையாளும் உரிமையை வழங்க வேண்டும் என்று பஞ்சாயத்து தலைவர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2020-08-25 05:44 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் யூனியனில் உள்ள பஞ்சாயத்துகளின் கூட்டமைப்பு தலைவர் அருணாசலவடிவு சீனிப்பாண்டியன் தலைமையில் பஞ்சாயத்து தலைவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கருங்குளம் யூனியன் பகுதியில் 31 பஞ்சாயத்துகள் உள்ளன. பஞ்சாயத்துகளில் தற்போது பல்வேறு பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடந்து வருகிறது. தற்போது வரை இந்த பணிகளுக்கான வேலை உத்தரவு அந்தந்த பஞ்சாயத்து செயலாளர்கள் பெயரி வழங்கப்பட்டு, பஞ்சாயத்து தலைவர்களை செயல் அலுவலர்களாக கொண்டு பணிகள் நடந்து வந்தன. ஆனால் தற்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள், பஞ்சாயத்து யூனியன் பணி என்றும், பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆகையால் எங்கள் உரிமையை மீட்டுத்தர வேண்டும். மேலும் 15-வது நிதிக்குழு மானிய நிதியை பஞ்சாயத்து தலைவர்களே கையாளும் உரிமையை வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

மக்கள் நீதி மய்யம்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீதிமய்யம் கட்சி செயலாளர் சேகர் தலைமையில் ரங்கநாதன், பிரகாஷ், மங்கள்ராஜ், வினோத், ராஜா மற்றும் கட்சியினர் கொடுத்த மனுவில், “வல்லநாடு அருகே ரவுடியை பிடிக்க சென்ற போது, போலீஸ்காரர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். அவருடைய குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே பணியின் போது இறந்த போலீசாரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீட்டு தொகை வழங்க அரசாணை உள்ளது. ஆகையால் போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு மேலும் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

சிவபாரத மக்கள் இயக்கம் தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் முத்துநயினார், சஷ்டிசேனா இந்து மக்கள் இயக்க நிறுவன தலைவி சரசுவதி மற்றும் அமைப்பை சேர்ந்தவர்கள் மனு கொடுக்க வந்தனர். அப்போது அதிகாரிகள் முறையாக மனு பெறவில்லை என்று கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதுல், “சேலம் மாவட்டம் புளியம்பட்டி சிவனடியார் சரவணன் தற்கொலைக்கு காரணமான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்