ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 250 பேருக்கு கொரோனா

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், டாக்டர்கள் உள்பட 250 பேருக்கு ஒரேநாளில் கொரோனா உறுதியானது. இதன்மூலம் தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை 21,850 ஆக உயர்ந்தது.

Update: 2020-08-25 05:05 GMT
வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 47 வயது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு சளி, இருமல் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து அவருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. அதன் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உடன்பணிபுரிந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு விரைவில் சளிமாதிரி சேகரிக்கப்பட உள்ளது. சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

வேலப்பாடி பகுதியில் உள்ள கடை வியாபாரிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. அதில், மருந்துக்கடை ஊழியர் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டார். அதேபோன்று மெயின் பஜாரில் கடை வியாபாரி ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டார்.

5 நோயாளிகளுக்கு தொற்று

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த 2 டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோன்று வேலூரில் உள்ள விடுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த ஷூ நிறுவன தொழிலாளி, சாய்நாதபுரத்தில் 80 வயது மூதாட்டி, மாநகராட்சி பகுதியில் 37 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 148 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டனர். தொற்று பாதித்த அனைவரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 9,771 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 8,415 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பி உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,578 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 41 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,501 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1,082 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 61 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,717 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் 658 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்