தூத்துக்குடி போலீஸ்காரர் மறைவுக்கு மட்டும் ஏன் வாய் திறக்கவில்லை? அரசியல் கட்சிகளுக்கு, ஐகோர்ட்டு கடும் கண்டனம்
தூத்துக்குடி போலீஸ்காரர் சுப்பிரமணியன் மறைவுக்கு மட்டும் ஏன் அரசியல் கட்சிகள் வாய் திறக்கவில்லை? என்று ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
சென்னை அயனாவரத்தில் இரு ரவுடி கும்பலுக்கு இடையே நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான வேலு உள்ளிட்ட பலரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதை எதிர்த்து அவர்கள் சார்பில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் தலைமையிலான டிவிசன் பெஞ்ச், “தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு ரவுடி கும்பல்களை ஒடுக்க, மராட்டியம், கர்நாடக மாநிலங்களில் உள்ளது போல ரவுடிகளை கட்டுப்படுத்த தனிச்சட்டம் இயற்றினால் என்ன? என்று கடந்த 2018-ம் ஆண்டு கேள்வி எழுப்பியது. இதற்கு அப்போதைய டி.ஜி.பி., தாக்கல் செய்த பதில் மனுவில், “அந்த மாநிலங்களை போல தீவிரவாதிகளோ, சட்டவிரோத கும்பலோ இல்லை” என்று பதில் அளித்திருந்தார்.
சமுதாயத்தில் பாதுகாப்பு இல்லை
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, “குற்றவியல் சட்டத்தை மறு சீரமைப்பு செய்து எல்லோருடைய பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராய மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் ஒரு குழுவை அமைத்து உள்ளதாக தெரிவித்தார்” என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முன்னாள் டி.ஜி.பி. தாக்கல் செய்த பதில் மனு திருப்தி அளிக்கவில்லை என்று கூறினர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டால், அந்த சமுதாயம் பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். சட்டம்-ஒழுங்கை பராமரிக்க குறைவான பலத்தை பயன்படுத்த போலீசாருக்கு உரிமை உண்டு. ஆனால் சமுதாயத்தில் என்ன நடக்கிறது? மக்கள் கூட்டமாக கூடி போலீசாரை தங்களது பணிகளை செய்யவிடாமல் தடுத்து அவர்களை அவமரியாதை செய்து, அவதூறான வார்த்தைகளால் திட்டி, தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
கண்டனம் இல்லை
பல இடங்களில் போலீசார் இதுபோல தாக்கப்படுவது பத்திரிகைகளில் செய்தியாக வருகிறது. கடந்த வாரம்கூட தூத்துக்குடியில் தனிப்படையில் பணியாற்றிய இளம் போலீஸ்காரர் சுப்பிரமணியன், ரவுடி ஒருவன் வீசிய வெடிகுண்டில் பலியாகியுள்ளார். இந்த சமுதாயத்துக்காக பணி செய்யும்போது, விலை மதிக்க முடியாத தன்னுடைய இன்னுயிரை அவர் இழந்துள்ளார். 10 மாத பச்சிளம் குழந்தையையும், இளம் கர்ப்பிணி மனைவியையும் விட்டு சென்றுள்ளார். இந்த பெண் தன் இளம் கணவரை இழந்துள்ளார். 10 மாத குழந்தை தன் தந்தையை இழந்துள்ளது. ஏன் வயிற்றில் உள்ள குழந்தை தன் தந்தை முகத்தை கூட பார்க்கவில்லை. இந்த துயரமான சம்பவம் எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் வரவழைக்கிறது. இந்த குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதியை வழங்கிய முதல்- அமைச்சர், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல இந்த சம்பவத்துக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தவிர, ஆளும் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
ஏன் வாய் திறக்கவில்லை?
குற்றவாளிகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்கும்போது, கூக்குரல் எழுப்பும் மனித உரிமை அமைப்புகள் இந்த விவகாரத்தில் வாய்திறக்காமல் அமைதியாக இருக்கிறது. போலீஸ்காரர்கள் மனிதர்கள் இல்லையா? குற்றவாளிகளின் கையில் அவர் சாகும்போது, அது மனித உரிமை மீறல் இல்லையா? மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. இரங்கலும் தெரிவிக்கவில்லை. போலீஸ்காரரின் மனைவியை சந்தித்து நிதியுதவியும் வழங்கவில்லை. ஆழ்துளை கிணற்றில் கடந்த ஆண்டு சுஜித்வில்சன் விழுந்து பலியான போதும், போலீசார் தாக்கி சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறந்தபோதும் எதிர்க்கட்சிகள் கண்டன குரல் கொடுத்தது வரவேற்கத்தக்கதுதான். நிதியுதவி அளித்ததும் பாராட்டுக்குரியதுதான். அங்கு வரிசையாக சென்று ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கியவர்கள், போலீஸ்காரர் சுப்பிரமணியன் கொலை சம்பவத்தில் அதேபோல ஏன் செயல்படவில்லை? அதற்காக போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதி வழங்கவேண்டும், இழப்பீடு வழங்கவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், மற்ற சம்பவங்களை போல, இந்த சம்பவத்தை ஏன் பார்க்கவில்லை? என்று தான் கேட்கிறோம்.
கடுமையான சட்டம்
உள்ளூர் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை. போலீஸ்காரர் சுப்பிரமணியனின் இறுதிச்சடங்கில் கூட டி.ஜி.பி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், உள்ளூர் எம்.எல்.ஏ. மட்டுமே கலந்து கொண்டனர். போலீஸ்காரரின் உயிர்தியாகத்தை அரசியல் கட்சியினர் கண்டு கொள்ளவில்லை.
இதுபோன்ற செயலால் போலீசார் தன்னம்பிக்கை இழப்பார்கள். போலீஸ்காரர் மீது குண்டு வீசியவன் இரட்டை கொலையில் சம்பந்தப்பட்டவன். அதனால், தமிழகத்தில் ரவுடி கும்பல்கள் தைரியமாக செயல்படுகிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது.
அதனால் தமிழகத்தில் ரவுடி கும்பல், கூலிக்காக கொலை செய்யும் கும்பல் குறித்து அனைத்து விவரங்களையும் அறிக்கையாகடி.ஜி.பி. தாக்கல் செய்யவேண்டும். மராட்டியம், கர்நாடக மாநிலங்களில் உள்ளது போல, ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் தமிழகத்திலும் ஏன் இயற்றப்பட கூடாது? இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் விரிவான பதிலை அளிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.