கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் தொல்லை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 35). இவரது மனைவி அஞ்சலிதேவி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சந்தோஷ் பழைய பிளாஸ்டிக்கை உருக்கி புது பிளாஸ்டிக் உருவாக்கும் தொழில் செய்து வந்தார். தொழில் நடத்த பல இடங்களில் சந்தோஷ் கடன் வாங்கி இருந்தார். கடந்த சில மாதங்களாக சந்தேஷின் பிளாஸ்டிக் தொழில் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தனர்.கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் சந்தோஷ் குடிப்பழக்கத்துக்கு ஆளானார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
தற்கொலை
ஒருபுறம் கடன் தொல்லை, மறுபுறம் கணவர் மதுவுக்கு அடிமையாகி விட்டாரே என்ற மனவேதனையில் இருந்த அஞ்சலிதேவி, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்த அஞ்சலிதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.