குமரியில் வினோதம்: திருமண வரன்களை தடுத்து நிறுத்துவதாக நூதன போராட்டம் நடத்திய இளைஞர்கள் - வைரலாக பரவும் வீடியோ

ஆற்றூரில் திருமண வரன்களை தடுத்து நிறுத்துவதாக பொதுமக்கள் மீது புகார் கூறி 2 வாலிபர்கள் நூதன போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2020-08-23 23:15 GMT
பத்மநாபபுரம்,

ஆற்றூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வெளியூர்களில் இருந்து வரும் திருமண வரன்களை சிலர் தடுத்து நிறுத்துவதாக இளைஞர்கள் மத்தியில் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக பெண் வீட்டார் இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் குறித்து விசாரிக்க வரும் போது சில பெண்கள் மற்றும் டீக்கடைகளில் அமர்ந்து இருப்பவர்கள் தவறான தகவல்களை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால், பல இளைஞர்களின் திருமணம் தடை படுவதாகவும், இதற்கு நூதன முறையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் வாலிபர்கள் சிலர் திட்டமிட்டனர். இந்தநிலையில், ஆற்றூர் பகுதியில் இரண்டு வாலிபர்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பது போல் அவர்களை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட னர். நூதன வாசகங்கள் அடங்கிய பேனரை சாலையில் விரித்து அதன் அருகே கைகூப்பிய நிலையில் அமர்ந்திருந்தனர்.

அந்த பேனரில் கீழ் கண்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. ‘வணக்கம், ஆற்றூர் மக்களுக்கு ஒருமுக்கிய அறிவிப்பு. ஆற்றூரில் வந்து விசாரிக்கும் அனைத்து திருமண வரன்களையும் தடுத்து நிறுத்தும் அனைத்து நெஞ்சங்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி. இப்பணியை செய்வோர் சில பெண்கள், சில ஆண்கள் மற்றும் பெட்டிக்கடையில் வந்திருப்போர். குறிப்பு: தங்களது நற்பணி மேலும் தொடர்ந்தால் இனி வரும் விளம்பரத்தில் தங்களுடைய பெயர், புகைப்படம் மற்றும் ஆதாரங்களுடன் வெளியிடப்படும். இப்படிக்கு திருமண வரன் தேடும் இளைஞர்கள், ஆற்றூர்.’ என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த பேனருடன் வாலிபர்களும் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சி வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபோல் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கல்லுக்கூட்டம் பகுதியில் திருமணத்தை தடுப்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக பேனர் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்