பெண்ணை மிரட்டி ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை கத்திமுனையில் கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பெங்களூருவில் வீடு புகுந்து பெண்ணை கத்திமுனையில் மிரட்டி ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-08-24 00:24 GMT
பெங்களூரு, 

பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாய் பிருந்தாவன் லே-அவுட்டில் வசித்து வருபவர் பசவா. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சந்தியா(வயது 25). இந்த நிலையில் பசவா வேலைக்கு சென்று விட்டார். இதனால் சந்தியா கதவை அடைத்து கொண்டு வீட்டிற்குள் இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் சந்தியாவின் வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்டது. இதனால் அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது வெளியே நின்று கொண்டு இருந்த 2 பேர் தங்களை கூரியர் நிறுவன ஊழியர்கள் என்றும், உங்கள் பெயரில் பார்சல் வந்து உள்ளது எனவும் கூறியுள்ளனர். இதனால் சந்தியா வீட்டுகதவை திறந்து உள்ளார்.

நகை-பணம் கொள்ளை

இதையடுத்து மர்மநபர்கள் 2 பேரும் சேர்ந்து சந்தியாவை வீட்டிற்குள் தள்ளி கதவை அடைத்து உள்ளனர். பின்னர் சந்தியாவின் கழுத்தில் கத்தியை வைத்த மர்மநபர்கள், பீரோ சாவியை கேட்டு உள்ளனர். ஆனாலும் சந்தியா பீரோ சாவியை கொடுக்க மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், பீரோ சாவியை கொடுக்காவிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன சந்தியா பீரோ சாவியை கொடுத்து உள்ளார்.

இதையடுத்து ஒரு நபர் மட்டும் பீரோவை திறந்து அதில் இருந்த நகை, பணத்தை எடுத்துவிட்டு வந்து உள்ளார். பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து சந்தியா தனது கணவர் பசவாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதனால் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தார். மேலும் சம்பவம் குறித்து கே.ஆர்.புரம் போலீசாருக்கு பசவா தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

அப்போது சந்தியாவை கத்திமுனையில் மிரட்டி ரூ.1.50 லட்சம் ரொக்கத்தையும், ரூ.8.50 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பசவா அளித்த புகாரின்பேரில் கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்