தளர்வு இல்லா முழு ஊரடங்கு: மாவட்டத்தில் கடைகள் அடைப்பு - பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின
தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தரவு நேற்று அமல்படுத்தப்பட்டதால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது.
கடலூர்,
கொரோனாா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த ஜூலை மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த மாதத்திலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலூர் மாவட்டத்தில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டது.
இதை பொதுமக்கள் முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பதால் நேற்று முன்தினமே தங்களுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வீட்டில் வாங்கி வைத்துக்கொண்டனர். அதுவும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டதால் பொதுமக்கள் கடைவீதிகள் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்திருந்தனர்.
நேற்று தளர்வு இல்லா முழு ஊரடங்கையொட்டி கடலூரில் உள்ள பால், மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நகைக்கடைகள் அதிகம் உள்ள திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ்ரோடு, முக்கிய சாலைகளான நேதாஜிரோடு, பாரதிரோடு, இம்பீரியல் ரோடு, செம்மண்டலம் போன்ற அனைத்து சாலைகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.
இது தவிர தற்காலிக மார்க்கெட்டுகள், பூ மார்க்கெட் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. இருப்பினும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்வோர் உரிய ஆவணங்களை காண்பித்தவுடன் போலீசார் அனுமதித்தனர். தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதற்காக போலீசார் முக்கிய சந்திப்புகளில் நின்று வாகன சோதனை நடத்தினர். இதேபோல் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், புவனகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்தவர்களிடம் போலீசார் அபராதம் விதித்தனர்.