உறவினர் சாவுக்கு காரணம் என கூறி இளம்பெண் உயிரோடு எரிப்பு - 2 பெண்கள் மீது கொலை முயற்சி வழக்கு
திருவோணம் அருகே உறவினர் சாவுக்கு காரணம் என கூறி இளம் பெண் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார். இதுதொடர்பாக 2 பெண்கள் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள எழுத்தாணிவயல் கிராமத்தை சேர்ந்த முத்தழகன் மகன் ஜெகதீஸ்வரன் (வயது27). கார் டிரைவர். இவரும் அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணனும் நண்பர்கள். ஜெகதீஸ்வரன், பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான காரை ஓட்டுவது வழக்கம்.
ஜெகதீஸ்வரன் வழக்கம்போல் கடந்த 21-ந் தேதி இரவு பாலகிருஷ்ணனின் வீட்டில் காரை நிறுத்திவிட்டு சென்றார். நேற்று முன்தினம் காலை ஜெகதீஸ்வரன் அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெகதீஸ்வரனின் அண்ணன் விக்னேஸ்வரனின் மனைவி ரமாமணி மற்றும் உமா ஆகிய இருவரும் பாலகிருஷ்ணனின் தங்கை சினேகாவை (20) சந்தித்து ஜெகதீஸ்வரன் சாவுக்கு நீ தான் காரணம்? எனக்கூறி அவரை தாக்கி மண்எண்ணெய்யை அவருடைய உடலில் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த சினேகா தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சினேகா அளித்த வாக்குமூலத்தின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் ரமாமணி, உமா ஆகிய 2 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.