பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அரியலூர்,
விநாயகர் சதுர்த்தியையொட்டி பெரம்பலூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள கச்சேரி விநாயகர் கோவிலில் அனுக்கை, கலசபூஜை, மகாகணபதி ஹோமம், திரவியஹோமம் மற்றும் பகலில் அபிஷேகங்கள் மகாதீப ஆராதனை நடந்தது. மாலை விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
பெரம்பலூர் நகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் பின்புறம் கடைவீதி சந்திப்பு அருகே உள்ள ஸ்ரீராஜவிநாயகர், காந்திசிலை அருகே உள்ள செல்வவிநாயகர் கோவில், எளம்பலூர் சாலையில் மேட்டுத்தெரு, மேரிபுரம் அருள்சக்தி விநாயகர் கோவில், துறையூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் பாலமுத்துமாரியம்மன் கோவில், இந்திராநகர், வடக்குமாதவி சாலையில் சவுபாக்கியவிநாயகர் கோவில், சங்குப்பேட்டை பகுதி, வெங்கடேசபுரம் உள்பட 15-க்கும் மேற்பட்ட விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஓம் சிங்கவிநாயகர்
எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவில் விநாயகர் சன்னதி, நான்கு ரோடு அருகே மின்வாரிய குடியிருப்பில் உள்ள விநாயகர் கோவில், தீரன்நகரில் உள்ள விநாயகர்கோவில், சிதம்பரம் நகரில் உள்ள பாலமுத்துகுமாரசாமி கோவில், சிவன் கோவில் பிரகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதி ஆகிய இடங்களில் உள்ள விநாயகருக்கு சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், மகாதீப ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
எளம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஓம் சிங்கவிநாயகர் கோவிலில் அர்ச்சகர் ரமேஷ் விநாயகருக்கு அபிஷேகங்கள் செய்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ராதேவிகுமார், மாவட்ட சிறு,குறு தொழிற்சங்க தலைவர் ஓம்சக்தி உதயகுமார் மற்றும் சிட்கோ உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராஜேஷ், சிங்கவிநாயகர் கோவில் சேவா அறக்கட்டளை தலைவர் சதாசிவம் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்கள், பள்ளி சிறுவர்- சிறுமியர்கள், சிட்கோ தொழிற்பேட்டையை சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர் கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
செல்வமகா வெற்றிகணபதி
பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் பிரும்மரிஷிமலை அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில் செல்வமகா வெற்றி கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இளம்தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் முன்னிலையில் நடந்தது. இதனை தொடர்ந்து உலகநன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம்பெருகிடவும் 210 சித்தர்கள் யாகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள ஸ்ரீமகாலிங்க சித்தர் ஆசிரமத்தின் சார்பில் எளம்பலூர் மகாலிங்கசித்தர்சுவாமி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் தயாளன்சுவாமி தலைமையில் கணபதிஹோமம், அபிஷேக ஆராதனைகளும், மகாதீப ஆராதனையும் நடந்தது. மதியம் அன்னதானமும், மாலை சிறப்பு பூஜையும் நடந்தது.
வேப்பந்தட்டை
இதேபோல் வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் கோவில்களில் சிலைகள் அலங்கரித்துவைக்கப்பட்டு சிறப்புவழிபாடு நடத்தப்பட்டது. பொதுஇடங்களில் சிலைகள் வைத்து வழிபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்து இயக்கங்களைச்சேர்ந்த நிர்வாகிகள், விநாயகர் பக்தர்கள் உற்சாகம் இழந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பா.ஜ.க. இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்பினர் மற்றும் பொது மக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். அதன்படி, வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர், அயன்பேறையூர், குன்னம் தாலுகா சின்ன பரவாய், கை பெரம்பலூர், வேப்பூர், மருவத்தூர் மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட டி.கீரனூர், பெருமத்தூர் குடிகாடு, கழனிவாசல், பெரம்பலூர் தாலுகா எம்.ஜி.ஆர். நகர், எழில்நகர், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் உள்ளிட்ட பகுதிகளில் 81 இடங்களில் வீடுகளின் திண்ணைகளில் 2 அடி முதல் 3 அடி வரையிலான விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதேபோல, பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளுக்கு கொய்யா, விளாம்பழம், கொழுக்கட்டை, மோதகம், இனிப்பு வகைகள் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர். மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் மூலவருக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கணக்க விநாயகர் கோவில்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் பிரசித்திபெற்ற கணக்க விநாயகர் கோவில் உள்ளது. விநாயகர்சதுர்த்தியையொட்டி இந்த விநாயகருக்கு நேற்று மஞ்சள் ,சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு கொழுக்கட்டை, சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராசேந்திரசோழன் இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடபட்டது. இதையொட்டி தாதம்பேட்டை, சீனிவாசபுரம், கீழசிந்தாமணி, மேலகுடிகாடு, அண்ணங்காரம்பேட்டை, உதயநத்தம், சிலால், அங்கராயநல்லூர், கோட்டியால், காரைக்குறிச்சி ஆகிய கிராமங்களில் தனியார் இடங்களில் 15 சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின் மாலையில்அந்த சிலைகள் அணைக்கரை, அண்ணங்காரம்பேட்டை, மதனத்தூர் ஆகிய இடங்களில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டது. இதையொட்டி ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தா. பழூர் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அரியலூர்
இதேபோல் அரியலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்புவழிபாடு நடத்தப்பட்டது. வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். அரியலூர் மங்காய் பிள்ளையார் கோவிலில் அருகம்புல் அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.