திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

Update: 2020-08-22 23:00 GMT
திருவண்ணாமலை,

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதேபோல் திருவண்ணாமலையிலும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நேற்று முன்தினம் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்தனர்.

நேற்றும் ஏராளமான மக்கள் கடைவீதிகளுக்கு பொருட்கள் வாங்க வந்தனர். நகரில் பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டது. களிமண்ணால் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

அதிலும் களிமண்ணால் செய்யப்பட்டு வண்ணங்கள் தீட்டப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு மவுசு அதிகமாக இருந்தது. விநாயகர் சிலைகளை அலங்கரிக்க சாலையோரம் வண்ண அலங்காரக் குடைகள் விற்பனை செய்யப்பட்டது. எருக்கம் பூ மாலை, கம்புக்கதிர், பச்சை வேர்க்கடலை விற்பனையும் அதிகமாக இருந்தது.

அதிக மக்கள் கூட்டத்தால் திருவூடல் தெரு, சின்னக்கடை வீதி, பெரிய தெரு, மார்க்கெட் போன்ற முக்கிய இடங்களில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பழங்கள், பூஜை பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு சற்று அதிகமாகவே இருந்தது. பொது இடங்களில் பிரம்மாண்டமாக வித விதமாக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் இந்த ஆண்டு வைக்கப்படவில்லை.

அருணாசலேஸ்வரர் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள இரட்டை பிள்ளையார் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

பொதுமக்கள் சிறிய வகையிலான சிலைகளை வீடுகளில் வைத்து சுண்டல், கொழுக்கட்டை, பழங்கள் ஆகியவற்றை படையலிட்டு வழிபட்டனர். மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் தொடர்ந்து ரோந்துப்பணியிலும், ஆங்காங்கே பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்