மின் இணைப்பில் பெயர் மாற்றம்: ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மேற்பார்வையாளர் கைது

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கி மின்வாரிய மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-08-22 02:05 GMT
பொள்ளாச்சி,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கொங்கல்நகரை சேர்ந்தவர் அமர்நாத். இவர் குடிமங்கலம் அருகில் உள்ள பண்ணை கிணற்றை சேர்ந்த ஜெயவேலிடம் இருந்து 4 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார். இதையடுத்து அவர், அந்த நிலத்துக்குரிய மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார்.

அங்கு கணக்கு பிரிவில் மேற்பார்வையாளராக பணிபுரியும் அகஸ்டின் கிறிஸ்டோபர் என்பவர் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய அமர்நாத்திடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு முன்பணமாக அகஸ்டின் கிறிஸ்டோபர் ரூ.500 பெற்றதாக கூறப்படுகிறது.

மேற்பார்வையாளர் கைது

இது குறித்த புகாரின் பேரில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை அமர்நாத்திடம் கொடுத்து மின்வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற அமர்நாத், மேற்பார்வையாளர் அகஸ்டின் கிறிஸ்டோபரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அதை அவர் வாங்கியதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அகஸ்டின் கிறிஸ்டோபரை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து அவரிடம், துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மாலை 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு மேற்பார்வையாளர் அகஸ்டின் கிறிஸ்டோபரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சியில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்