தேங்காய்த்திட்டில் படகு தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ

தேங்காய்த்திட்டில் படகு தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

Update: 2020-08-22 01:09 GMT
புதுச்சேரி,

சென்னையை சேர்ந்த பாலசந்தர் என்பவர் புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே பைபர் படகுகள் தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் இந்த நிறுவனத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறினார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். புதுவை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பைபர் பொருட்கள் என்பதால் தீயை அணைப்பதில் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. உருகி உருகி வழிந்த அந்த பொருட்கள் பற்றி எரிந்தன. 5 வாகனங் களை கொண்டு சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கடுமையாக போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் படகுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பைபர் பொருட்கள் எரிந்து நாசமாயின.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்