தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3 டாக்டர்கள் உள்பட 74 பேருக்கு கொரோனா

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3 அரசு டாக்டர்கள் உள்பட 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Update: 2020-08-22 00:34 GMT
தர்மபுரி,

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 39 வயது பெண் டாக்டருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணத்தை சேர்ந்த 46 வயது டாக்டர், பாலக்கோடு அருகே செட்டிஅள்ளியை சேர்ந்த 23 வயது பெண் டாக்டர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்த 42 வயது துப்புரவு பணியாளர், புலிகரையை சேர்ந்த 29 வயது பெண் வங்கி ஊழியர், மாரண்டஅள்ளியை சேர்ந்த 29 வயது நிதி நிறுவன ஊழியர், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் 35 வயது டிரைவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மகேந்திரமங்கலத்தை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி, 24 வயது கல்லூரி மாணவர், 53 வயது போலீஸ்காரர் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,089 ஆக உயர்ந்து உள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக குறைந்து வந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று ஓசூர் பகுதியில் 23 பேருக்கும், கிருஷ்ணகிரி பகுதியில் 5 பேருக்கும், காவேரிப்பட்டணம் பகுதியில் 14 பேருக்கும், ராயக்கோட்டை பகுதியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

மத்தூர் பகுதியில் 3 ஆண்களுக்கும், வேப்பனப்பள்ளி பகுதியில் 2 பெண்களுக்கும் என மொத்தம் நேற்று ஒரு நாளில் மட்டும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,787 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சை பெற்று வந்தவர்களின் 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொடர்ந்து 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்