குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்
திருவெண்ணெய்நல்லூரில் நெல்லுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு பெரியசெவலை, அரசூர், ஏனாதிமங்கலம், திருவெண்ணெய்நல்லூர், ஆனத்தூர், சித்தலிங்கமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்யும் நெல்லை மூட்டைகளை கட்டிக்கொண்டு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே நெல்லுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் வியாபாரிகள் இங்கு வராததால் நெல் வரத்தும் குறைவாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரியசெவலையை சேர்ந்த விவசாயிகள், நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 75 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல் ரூ.869 என விலை நிர்ணயம் செய்தனர். அதற்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரிடம் விவசாயிகள் சென்று விழுப்புரம், பண்ருட்டி,உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஒரு மூட்டை நெல் ரூ.900-க்கும் மேல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது, ஆனால் நீங்கள் மட்டும் குறைவாக விலை நிர்ணயம் செய்கின்றீர்கள் என்று கேட்டனர். அதற்கு விருப்பம் இருந்தால் இங்கு விற்பனை செய்யுங்கள், இல்லையெனில் ரோட்டில் கொண்டுபோய் கொட்டுங்கள் என்று விவசாயிகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் திட்டியதாக கூறப்படுகிறது.
விவசாயிகள் போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், நேற்று திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலகம் முன்பு டிராக்டர் மூலமாக நெல்லை கொண்டு வந்து அதனை சாலையில் கொட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் வேல்முருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) வசந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் இடைத்தரகர்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு குறைந்த விலைக்கு நெல்லை விலை நிர்ணயம் செய்வதாகவும், இதனால் நாங்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் முறையிட்டனர்.
இதை கேட்டறிந்த அதிகாரிகள், இதுபற்றி மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு அவர்கள், சாலையில் கிடந்த நெல்லை மீண்டும் மூட்டைகளாக கட்டி டிராக்டரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.
இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.